Tuesday, January 10, 2006

--------

காமராஜ் - 101 [ # 20 ]

காமராஜ் முதல்வராக இருந்தபோது அவரது அன்னையாருக்கு செலவுக்கு மாதம் ரூ.120 கொடுத்துக் கொண்டிருந்தார். அது போதவில்லை என்பதற்கு அன்னையார், முருக தனுஷ்கோடியிடம் ஒரு காரணத்தைக் கூறினார்.

" அய்யா முதல் மந்திரியாக இருப்பதால், என்னைப் பார்க்க யார் யாரோ வருகிறார்கள். வடநாட்டைச் சேர்ந்தவர்களும் வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு சோடா, கலர் கொடுக்காமல் எப்படி அனுப்புவது? ஆகையால், அய்யாவிடம் சொல்லி, மாதம் 150 ரூபாய் கிடைக்க ஏற்பாடு செய்தால் நல்லது" என்று கேட்டுக் கொண்டார். முருக தனுஷ்கோடி சென்னை வந்ததும் காமராஜிடம் சொன்னார். ஆனால் அவரோ 120 ரூபாய்க்கு மேல் கொடுக்க மறுத்துவிட்டார். " யார் யாரோ வருவார்கள். உண்மைதான். அவர்கள் சோடா, கலர் கேட்கிறார்களா? அவர்களுக்கு ஒன்றும் கொடுக்க வேண்டாம். தவிர கையில் கொஞ்சம் ரூபாய் சேந்தால் அம்மா எங்காவது கோவில், குளம் என்று போய் விடுவார்கள். வயதான காலத்தில் வெளியூர் போவது நல்லதல்ல. எனவே இப்போது கொடுத்துவரும் 120 ரூபாயே போது" என்று சொல்லிவிட்டார்.

அதேபோல், அன்னையார் தமது மகள் நாகம்மாளின் மகன் ஜகவருக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்றும் வீட்டில் கக்கூஸ் அமைக்க பக்கத்தில் ஒரு இடம் ரூ.3000 த்துக்கு வாங்க வேண்டும் என்றும் முருக தனுஸ்கோடியிடம் கூறினார்.

ஒரு முதலமைச்சரின் வீட்டில் இந்த வசதி கூட இல்லாவிட்டால் எப்படி?

இதில் உள்ள நியாயத்தை உணர்ந்த தனுஷ்கோடி, காமராஜை சந்தித்துக் கூறினார். உடனே காமராஜ் " நீ கக்கூசுக்கு இடம் வாங்க வேண்டும் என்று சொல்கிறாய். ஊரில் உள்ளவன், நான் பங்களா வாங்கிவிட்டதாக சொல்லுவான். சிலர் பத்திரிக்கையில்கூட எழுதுவார்கள். அதெல்லாம் வேண்டாம். நீ போ" என்று கோபமாக பேசி அனுப்பினார்.

ஆனால் ஒரு தடவை " போர்வை வேண்டும்" என்று அன்னையார் எழுதிய கடிதத்தைப் பார்த்த காமராஜ், உடனே வாங்கி அனுப்ப எற்பாடு செய்தார். அதே போல் " டேபிள் பேன் வேண்டும்" என்று கடிதம் மூலம் கேட்டதும், அதையும் வாங்கி அனுப்பினார்.

அவர் வகித்த முதலமைச்சர் பதவி, அவரது வாழ்க்கை நிலையில் எந்த மாற்றத்தையும் எற்படுத்த அனுமதித்ததில்லை.

-------------------------------------------------------------------
பால்: அறத்துப்பால்

அதிகாரம்: அடக்கமுடைமை (13)

குறள்:
நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்;
மலையினும் மாணப் பெரிது.

பொருள்:
தன் நேர்மையான வழியை விட்டு விலகாது அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது.

-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் நட்சத்திரத்தில் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Monday, January 09, 2006

--------

காமராஜ் - 101 [ # 19 ]

ராயபுரம் கடற்கரைக்குப் அடுத்த நிலையில் சென்னை மக்களின் மாலை நேர உல்லாசபுரியாக இருந்தது "ஹைகோர்ட் பீச்" என்றழைக்கப்பட்ட செயிண்ட் ஜார்ஜ் எதிரிலமைந்த பரந்த கடற்கரை. கடற்கரையில் வடபுறம் அமைந்த மக்கள் வாழ்பகுதியினர் அங்கு செல்ல, இடையில் வரும் இரயில்வே கிராசிங்கை கடந்தே போகவேண்டும். மின்சார தொடர்வண்டிகளின் அதிகமாக செல்கின்ற நிலையில், மக்களின் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் ரயில்வே கதவடைப்பால் தடைபடும்.

இன்நிலையில்தான் ரிசர்வ் பேங்க் கட்டிடம் பிரமாண்டமான உருவில் சகல வசதிகளுடன் இப்போதிருக்கும் இடத்தில் கட்டப்பட்டுவிட்டது. இதனால் மாலை நேர கடற்கரைக் கூட்டத்துடன், வங்கி செயல்படும் நேரம் மக்கள் கூட்டம் ரயில்பாதையருகே கூடத்தொடங்கி போக்குவரத்து சிக்கலேற்ப்பட்டது.

இதிலிருந்து மக்களுக்கு வசதி செய்து தர வேண்டுமெனில், ஒன்று, அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும், அல்லது தரை வழிப்பாலம் அமைக்க வேண்டும். வடபுறம் பாரிமுனை இருந்ததால் அங்கு மேம்பாலம் கட்ட சாத்தியமில்லை என முடிவாயிற்று. அப்படியானால், தரைவழிப்பாலம் அமைத்து ரயில்வே பாதைக்கும், மக்களின் போக்குவரத்திற்க்கும் வழியமைக்க வேண்டும்.

இது குறித்து ஆய்வு செய்ய ரிசர்வ் வங்கி உயர்மட்ட குழுவினரும் தமிழக பொது வேலைத்துறையினரும் (PWD) ஆய்வு மேற்கொண்டனர்.

அவர்கள் ஆய்வின் முடிவுப்படி தரைப்பாலம் கட்டினால் 1) ரிசர்வ் பாங்க் கட்டிட அடித்தளம் பாதிக்கப்பட்டு கட்டிடத்தில் விரிசல் ஏற்படலாம். 2) அருகில் கடல் இருப்பதால் பாலத்தின் உட்புறம் ஊறிவரும் நீரூற்றை நிரந்தரமாக கட்டுப்படுத்த முடியாது. இந்த முடிவோடு முதலமைச்சர் காமராஜரை சந்திக்க சென்றனர்.

காமராஜ் கேட்டார், "என்ன முடிவெடுத்திருக்கீங்க ?" குழுவினர் சொன்னார்கள் " ஐயா! தரைவழிப்பாலம் கட்ட முடியாது என்றே நாங்கள் அபிப்ராயப்படுகிறோம்".

காமராஜ் புன்னகைத்தார், அடுத்து உறுதியான குரலில் சொன்னார்: " முடியாதுன்னு சொல்றதுக்காகவா டெல்லியிலிருந்து வந்தீங்க... தரை வழிப்பாலம் கட்டுறோம்... நீங்க சொல்ற எந்த குறைபாடும் வராமல் கட்டி முடிக்கிறோம். இந்த உலகத்திலே மனிதனால் செய்யமுடியாத்துன்னு எதுவுமே கிடையாது. நீங்க புறப்படலாம்" வந்தவர் சென்றனர்.

" இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து" அதற்க்குரிய வல்லுனர்களை அழைத்தார். பொறுப்பை ஒப்படைத்தார்.

இன்று நாள் தோறும் மக்கள் கடந்து செல்லும் "காமராஜர் சாலை" தரைவழிப் பாலம் உருவானது.

-------------------------------------------------------------------

பால்: பொருட்பால்

அதிகாரம்: வினைத்திட்பம் (67)

குறள்:
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்;
மற்றைய எல்லாம் பிற்.

பொருள்:
ஒரு செயலை இடையில் விடாது செய்து முடிப்பதற்கான செயல் உறுதி என்பது ஒருவனின் மன உறுதியே; மற்றவை உறுதி என்ப்படமாட்டா.

-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் நட்சத்திரத்தில் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Friday, January 06, 2006

--------

காமராஜ் - 101 [ # 18 ]

குஜராத் பல்கலைக் கழகம் தனது பேரவையைக் கூட்டி, இந்தியாவிலேயே எந்த மாநில அரசும் நினைத்து பாராத அளவில் கல்வித் துறையில் செயற்கரிய சாதனைகள் செய்தமைக்காக "டாக்டர்" பட்டம் தர தீர்மாணம் போட்டு காமராஜை தேடி வந்தார்கள். வந்தவர்களிடம் காமராஜ் என்ன சொன்னார் தெரியுமா?

" டாக்டர் பட்டமா? எனக்கா? நான் என்ன பெரிய சாதனை செஞ்சுட்டேன்னு இந்த முடிவெடுத்தீங்க. அதெல்லாம் வேண்டாம்... நாட்டில் எத்தனையோ விஞ்ஞானிகள், மேதாவிகள் இருக்கிறாங்க... அவுங்களை தேடிப்புடுச்சு இந்த பட்டத்தை குடுங்க. எனக்கு வேண்டாம்... நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன்... போய்வாங்க" என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

டாக்டர். ஐன்ஸ்டீன் மகாத்மா மறைவின் போது விடுத்த செய்தி- " இப்படிப்பட்ட ஒரு மாமனிதர் இந்த நிலவுலகத்தில் ஊனோடும் உதிரத்தோடும் உலவினார் என்பதை வருங்காலச் சந்ததியினர் நம்பவே மறுப்பர்".

காமராஜரை பற்றி முற்றிலும் அறிந்தவர்களின் மனநிலையும் இதுவாகத்தான் இருக்கும்.

-------------------------------------------------------------------

பால்: பொருட்பால்

அதிகாரம்: பெருமை (98)

குறள்:
பெருமை பெருமிதம் இன்மை; சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.

பொருள்:
பெருமைப்பட்டுக்க் கொள்ளக் காரணங்கள் இருந்தும் செருக்கு இல்லாமல் இருப்பது பெருமை; காரணம் இல்லாமலேயே பெருமைபட்டுக்கொள்வது சிறுமை.

-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் நட்சத்திரத்தில் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Thursday, January 05, 2006

--------

காமராஜ் - 101 [ # 17 ]

தொழில் துறைகளை வளர்பதைக் குறிக்கோளாகக் கொண்டு, பல்வேறு நடைமுறைகளை செயல்படுத்த தொடங்கியது காமராஜ் அரசு. காமராஜ் ஆட்சியின் இறுதியில் தமிழகம் தொழில் வளத்தில் வடநாட்டு மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்துவிட்டது. அவரின் ஆட்சியில் தொழிதுறை வளர்ச்சியின் பகுதி...

பெரும் தொழில்கள்:
1. நெய்வேலி நிலக்கரித் திட்டம்
2. பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை (I.C.F)
3. திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் (BHEL)
4. ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை (HPL)
5. ஆவடி கனரக (டாங்க்) வாடன தொழிற்சாலை
6. கல்பாக்கம் அணுமின் நிலையம்
7. கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை
8. சங்ககிரி துர்கம் இந்தியா சிமெண்ட்ஸ்
9. மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
10. கிண்டி அறுவை சிகிச்சை கருவித் தொழிற்சாலை
11. துப்பாக்கி தொழிற்சாலை
12. நெய்வே நிலக்கரி சுரங்கம்
13. சேலம் இருப்பு உருக்காலை
14. பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை
15. அரக்கோணம் இலகுரக ஸ்டீல்பிளாண்ட் தொழிற்சாலை

விவசாயம் சார்ந்த தொழில்கள்:
1. காமராஜ் பொருப்பேற்றபோது (1953) தமிழகத்தில் புகலூர், நெல்லிக்குப்பம், பாண்டியராஜபுரம் ஆகிய 3 சர்கரை ஆலைகள் இயங்கி வந்தது. 1963-ல் மொத்தம் 14 சர்கரை ஆலைகளாக உயர்ந்தது.
2. திருச்சியில் 20 லட்சம் சக்தி கொண்ட எரிசாராய உற்பத்தி தொழிற்சாலை துவக்கப்பட்டது.

பிற தொழில்கள்:
நூல் நூற்பு ஆலைகள் (159)
துணிநூற்பு பாவுகள் (Looms) (8000)
4 மிதிவண்டி தொழிற்சாலைகள்
6 உரத் தொழிற்சாலை
2 சோடா உற்பத்தி தொழிற்சாலை
21 தோல் பதனிடும் தொழிற்சாலை
ரப்பர் தொழிற்சாலை
காகித உற்பத்தி ஆலை
அலுமினிய உற்பத்தி ஆலை

தொழிற் பேட்டைகள்:
1. கிண்டி, விருதுநகர், அம்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை, விருதுநகர், மார்த்தாண்டம், ஈரோடு, காட்பாடி, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட 19 தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டன.
2. இது தவிர திண்டுக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி, கோவில்பட்டி, கிருஷ்ணகிரி, அரக்கோணம், தேனி, நாகர் கோயில், கும்பகோணம் மற்றும் சிவகங்கை ஆகிய இடங்களில் புதிய தொழிற்பேட்டைகள் துவங்க காமராஜ் அரசு முயற்சி மேற்கொண்டது.
3. மேலும் சென்னை, நெய்வேலி, தூத்துக்குடி, சேலம், கோவை, பொள்ளாச்சி, திருச்சி ஆகிய இடங்களில் தொழிற் குழுமங்கள் அமைக்கப்பட்டன.

காமராஜ் ஆட்சிக் காலத்தில் தமிழகம் தொழில் வளர்ச்சியில் புலிப் பாய்ச்சல் கண்டது என்பதை இதிலிருந்தே நாம் அறியலாம்.

-------------------------------------------------------------------

பால்: பொருட்பால்

அதிகாரம்: குடி செயல் வகை (103)

குறள்:
சூழாமல் தானே முடிவுஎய்தும், தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு.

பொருள்:
தன் குடியையும், நாட்டையும் மேன்மை அடையச் செய்ய தேவையான் செயலை விரைந்து செய்பவர்க்கு, அச்செயலை செய்து முடிக்கும் திறம் அவர் நினைக்காமலே கிடைக்கும்.

-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் நட்சத்திரத்தில் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Wednesday, January 04, 2006

--------

காமராஜ் - 101 [ # 16 ]

தொண்டர்கள் யாராவது கதர் துண்டுகள், சால்வைகள் அணிவித்தால் தலை தாழ்த்தி ஏற்றுக் கொள்வார். ஆனால் பூமாலைகளை கோண்டுவந்தால் கையிலேயே வாங்கிக் கோள்வார். இது தொண்டர்களின் நெஞ்சில் ஆதங்கத்தை ஏற்படுத்தியது உண்டு.
தொண்டர்களின் அன்பு வெளிப்பாட்டை ஏற்பதில் ஏன் இந்த பாகுபாடு? இதற்கான விடையை ஒரு முறை திரு.வைரவன் விளக்கினார்.

காமராஜ் தனக்கு அணிவிக்கபடும் துண்டுகளனைத்தையும் பால மந்திர் எனும் அனாதைச் சிறுவர் பள்ளிக்கு அனுப்பி விடுவார். அவை அக்குழந்தைகளுக்கு உடனடியாக பயன்படும். விலை உயர்ந்த சால்வைகள் விற்பனைக்கு பிறகே குழந்தைகளுக்கு சென்று சேரும் என்பதால் அவைகளை அதிகம் விரும்பமாட்டார்.

பூ மாலைகளை முதலில் வாங்கிக்கொண்டுதானிருந்தார். ஆனால் அவையனைத்தும் பயன்படாமல் தோட்டத்து எருக்குழிக்கே சென்று விடுவதால் மிகுந்த கவலையடைவார். மேலும் மலர்மாலைகளில் பூக்களினிடையே வாழும் புழுக்களின் கடிகளால் பலமுறை கழுத்து புண்ணாகிப் போயிருக்கிறார். ஜரிகை நூல் சுற்றிய மாலைகளால் பலமுறை அறுத்துக் கழுத்தில் கீறலகள் கண்டிருக்கிறார். நீரிழிவு நோய் தாக்கிய உடலாகையால், அப்புண்டளால் துன்பற்றிருக்கிறார். எனவே மலர் மாலைகளை விரும்ப மாட்டார்.

மேலும் தொண்டர்கள் அவர் காலில் விழுவதை விருப்பவே மாட்டார்.

" அதென்ன... மனுசனுக்கு மனுசன் காலி விழுந்து குப்பிடறது" என்று கூறுவார். சில வேளைகளில் காலில் விழுபவர்களை செல்லமாக அடித்தும் விடுவார்.

-------------------------------------------------------------------
பால்: பொருட்பால்

அதிகாரம்: சான்றாண்மை (99)

குறள்:
குணநலம் சான்றோர் நலனே; பிறநலம்
எந்நலத்து உள்ள்தூஉம் அன்று

பொருள்:
சான்றோர் என்பவர்க்கு அழகு, குணங்களால் ஆகிய அழகே. பிற புற அழகெல்லாம் எந்த அழகிலும் சேரா.

-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் நட்சத்திரத்தில் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Tuesday, January 03, 2006

--------

காமராஜ் - 101 [ # 15 ]

ஒருமுறை காரிலே பயணம் செய்துகொண்டிருந்த காமராஜ், ஒரு கிராமத்து ரோடு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது தூரத்தில் சிறுவர்கள் ஆடு மேய்த்துக்கொண்டிருப்பதை பார்த்ததும் காரை நிறுத்த சொன்னார். காரிலிருந்து இறங்கி ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்களை கூப்பிட்டார். ஆச்சர்யமடைந்த சிறுவர்கள் அவரை சூழ்ந்துக் கொண்டனர். காமராஜ் அவர்களோடு உரையாடத் தொடங்கினார்.

" என்னடா, தம்பிகளா, பள்ளிக்கூடம் போய்ப் படிக்காமல் ஆடு மேய்ச்சுக்கிட்டுக்கிறீங்க... ஏன் பள்ளிகூடம் லீவா?"
" பள்ளிக் கூடமா, அதெல்லாம் எங்க ஊரிலே கெடயாது" சிறுவர்கள் பதில்.
" அப்படியா? சரி ...உங்க ஊரில் பள்ளிக்கூடம் வச்சா, நீங்களெல்லாம் படிப்பீங்களா?"
" பள்ளிக்கூடம் போய்ட்டா எங்களுக்கு சொறு போடறது யாரு? ஆடு மேய்ச்சாலும் ஆட்டுக்கு சொந்தகாரர் சோறு போடுவார்... ஆடு குட்டி போட்டா ஒரு குட்டி ஆடு குடுப்பாறு".
" ஓஹோ ...இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? சரி, பள்ளிக்கூடம் கட்டி ஒரு வேளை சோறு போட்டா படிப்பீங்களா?"
" ஓ... படிப்போமே... எதுக்கும் எங்க அப்பாரை கேட்கனும்"
" சரி சரி ... நான் கேட்டுக்கிறேன், பள்ளிக்கூடம் உங்க ஊருக்கு வந்தா நீங்க எல்லாம் படிக்கப் போங்க!" என்று கூறிவிட்டு காரில் புறப்பட்டார்.

எல்லா மக்களையும் படிக்க வைக்க வெறும் பள்ளிக் கூடங்களை கட்டியும் ஆசிரியர்களை நியமித்தால் மட்டும் போதாது, அங்கு படிக்க வருகிறவர்களுக்கு நண்பகளில் உணவும் அளிக்க வேண்டிய நிலையிலேயே கிராமவாசிகள், பட்டணத்து ஏழைகள் நிலை இருக்கிறது என்பதை சிந்தித்தார்.

இதை தொடர்ந்து நடந்த நிர்வாக கூட்டத்தில் இது தொடர்பாட நடந்த நிகழ்வுகளை முந்தைய பதிவின் ஒரு பகுதியில் பார்த்திருப்பீர்கள்.

-------------------------------------------------------------------

பால்: பொருட்பால்

அதிகாரம்: அமைச்சு (64)

குறள்:
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.

பொருள்:
நூலறிவால் செய்யும் வகையை அறிந்தாலும், உலகின் இயற்கை நடைமுறையையும் அறிந்து அதனோடு பொருந்தச் செய்ய வேண்டும்.

-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் நட்சத்திரத்தில் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

This page is powered by Blogger. Isn't yours?