Monday, January 08, 2007

--------

காமராஜ் - 101 [ # 4.b ]

(தொடர் நான்கு மிகப் பெரிய பதிவாக இருக்கும் காரணத்தால், வாசிக்க எளிதாக சிறிய பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.)

>>>>>> இனி சற்று விரிவாக ... <<<<<<<<


மனிதகுல முன்னேற்றத்திற்க்கு முக்கிய சொத்தாக இருக்கின்ற அறிவுக்கு தமிழகத்தில் அடித்தளமிட்டு, தமிழனின் வாழ்வுக்கு அச்சாரம் இட்டவர் காமராஜ். கல்வியில் சிறந்தது தமிழ் நாடு, அதை தமிழனுக்குச் சிறந்த, உரிய முறையில் அளித்தவர் காமராஜ்.

காமராஜ் பொறுப்பேற்ற ஆண்டில், கல்வி கல்வி அமைச்சர் சட்ட சபை கூற்றுப் படி "குறைந்த பட்ச தொடக்க கல்விக்கே 10- 12 கோடி ரூபாய் புதிய பள்ளிகளுக்கும், 6 கோடி ரூபாய் ஆசிரியர்களுக்கும் தேவை. மாகானத்தின் தற்போதைய நிதி வசதிவளை கொண்டு இவ்வளவு பெரிய நிதிச்சுமையை சமாளிக்க முடியுமா என சபை ஆராய வேண்டும்" என்பதே. ஆனால் அது மட்டும் பிரச்சனையாக இருக்கவில்லை, பள்ளிக்கு குழந்தைகள் வருகை, வந்தாலும் குறைந்தபட்ச ஆரம்ப கல்வி வரையிலாவது நீடிப்பது, பள்ளி செல்ல குழந்தைகள் செல்ல வேண்டிய நீண்ட தூரம், பள்ளி கூடங்களில் நிலவிய ஏற்றத் தாழ்வுகள் என இப்படியும் பிரச்சனைகள். கல்வி மேம்பாடு என்பது ஒரு இரவில் நடைபெறக் கூடிய செயலல்ல.

1954-ல் தொடக்க கல்வின் நிலையறிய அரசு ஒரு குழுவை டாக்டர்.அழகப்ப செட்டியார் தலைமையில் நியமித்தது. அக்குழுவின் பரிந்துரைக்குபின் கல்வி திட்டங்கள் தீட்டலாமென்று எண்ணாமல், காமராஜ் முதலமைச்சராக பொறுப்பேற்ற அதே கல்வி ஆண்டில் இயன்ற அளவு தொடக்க பள்ளிகள் திறந்திட அனைத்து முயற்சியுகளும் மேற்கொள்ளப்பட்டன. ராஜாஜி கொண்டுவந்த குலக் கல்வித் திட்டத்தை தற்கொலைத் திட்டமாகக் கருதி கல்லறை கட்டினார், ராஜாஜி இழுத்து மூடிய 6000 ஆரம்பப் பள்ளிகளை மீண்டும் திறக்க உத்தரவு பிறப்பித்தார். பள்ளி தொடங்க நடைமுறைகள் எளிமை படுத்தப்பட்டன(1954- 55). பள்ளிகள் திறப்பதற்கு யாரும் விண்ணப்பம் அளிக்க வேண்டியதில்லை. அதிகாரிகளே ஊர் ஊராக சென்ரனர். எங்கெல்லாம் 500 பேர் வாழும் ஊர் உண்டோ அங்கே சென்றனர். ஒரு பள்ளிக்கூடத்திலிருந்து ஒரு மைல் கல் தொலைவில் இன்னொரு பள்ளி வருமாறும் பார்த்துக் கொண்டணர். இந்த இரண்டு அடிப்படை கொண்டு, 500 பேர் வாழும் சிற்றூர் தோறும் பள்ளிகள் நிறுவப்பட்டன. 500, அதற்க்கு மேல் மக்கள்தொகை கொண்ட கிராமங்கள், சிறு நகரங்கள் கணக்கெடுக்கப்பட்டு, 12,967 புதிய பள்ளிகள் நிறுவப்பட்டன. 500 பேருக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட சிற்றூரிலும் பள்ளிகூடம் திறக்க வேண்டும் என காமரஜிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது. அவர்களின் வேண்டுகோள் நியாயமாக இருந்ததைக் கருதி, 1962- 63-ல் காமராஜ் அரசு 300 மக்கள் தொகை கொண்ட எல்லா சிற்றூரிலும் பள்ளிகள் துவங்கலாமென காமராஜ் அறிவித்து செயல்படுத்தினார். இதனால் தமிழகத்தின் அனைத்து சிற்றூரிலும் பள்ளிக்கூடம் துவங்கப்பட்டது, பள்ளிகளின் எண்ணிக்கை 30,000 தாண்டியது. பதவி ஏற்ற சுமார் 8 ஆண்டுகளில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை காமராஜின் கல்வித்திட்டத்தால் இரு மடங்காகியது.

இந்திய அரசியலமைப்ப்புச் சட்டத்தில் கண்டுள்ளவாறு, தம் ஆளுகையின் கீழிருந்த தமிழ் நாடு மாநிலத்தில் பதினான்கு வயதுடைய பிள்ளைகளுக்குக் கட்டாய இலவச கல்வித் திட்டத்தைச் செயல்படுத்தினார். இந்திய அரசு, கிராமப்புறம் சார்ந்த பகுதிகளில் ஓராசிரியர் பள்ளியை உருவாக்கி தொடக்கக் கல்வியை மேம்படுத்தக் கொண்டுவந்த திட்டத்தைக் காமராஜ் அரசு எற்று உடனே செயல்படுத்தியது. தொடக்கப் பள்ளிகளே இல்லாத பகுதிகளில் இத்திட்டத்தை பயன்படுத்தி, அதிகமான ஓராசிரியர் பள்ளிகளை காமராஜ் அரசு உறுவாக்கியது.

இதனால் 1954- 55-ல் 19 லட்சமாக இருந்த செலவு 1962-ல் இருமடங்காகி 38 லட்சம் ஆனது. இவ்வளவு திட்டங்களை செயல்படுத்தியும் கல்வியின் சிறப்பை உணராத மக்கள், இளம் பிள்ளைகளைக் கல்வி கற்க அனுப்பாததைக் கண்டு காமராஜ் வருத்தமுற்றார். எனவே கிராமந்தோறும் பிரச்சாரக் கமிட்டிகளை அமைத்துக் குழந்தைகளைப் பள்ளியில் சேரக்க வழி செய்தார்.

தொடக்க கல்வி பயின்ற பிள்ளைகளின் எண்ணிக்கை பெருகியதால், உயர்நிலைப் பள்ளிகளின் தேவை அவசியமானது. ஆகவே, காமராஜ் அரசு மாநிலம் முழுவதும் பரவலாக உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுத்தது. இதன் காரணமாக கிராம பகுதிகளில் பல உயர்நிலைப் பள்ளிகள் தோன்றியது.

உயர்நிலைப் பள்ளி அளவிலேயே, ஏட்டுக் கல்வியோடு தொழி துறை சார்ந்த கல்வியை கற்பிக்க "தொழில்சார் கல்விமுறை" அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய கல்வித் திட்டத்தால் உயர்நிலைப் பள்ளி அளவிலேயே - எஞ்னியரிங், அக்ரிகல்ச்சர், செக்ரடேரியல் கோர்ஸ், டெக்ஸ்டைல் டெக்னாலஜி முதலான தொழில் சார் கல்வி கற்க வழி வகுத்தார். கல்வியை கற்பிக்கத் தரமான ஆசிரியர்கள் தேவை என்பதை உணர்ந்த காமராஜ் அரசு, திறமை மிக்க ஆண்-பெண் ஆசிரியர்களை உருவாக்க ஆசிரியர் பயிற்ச்சிப் பள்ளிகளை அதிகமாக திறக்க முன் வந்தது.


தொடர் நான்கு முழுவதையும் வாசிக்க...

Comments: Post a Comment



<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

This page is powered by Blogger. Isn't yours?