Friday, March 24, 2006

--------

காமராஜ் - 101 [ # 30 ]

இன்னொரு நிகழ்ச்சி, அப்போது காமராஜ் முதலமைச்சராக இருந்தார். நெல்லை மாவட்ட சுற்றுப்பயணத்தில் இருந்த அவர், சிவகிரி பயணியர் விடுதியில் தங்கி இருந்தார். பொழுது புலர்ந்து கொண்டிருந்தது, கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த காமராஜ், ஒரு காட்சியைக் கண்டார். " போய்யா... பொழுது விடிய நேரமில்லை. இப்பவே வந்துட்டீங்க தொந்தரவு கொடுக்க... அய்யா இன்னும் எழுந்திருக்கல. அப்புறமா வாங்க..." என்று உறத்த குரலில் போலீஸ்காரர் ஒருவர் கெடுபிடி செய்து கொண்டிருந்தார்.

விரட்டப்பட்ட அந்த நபரோ, " அய்யா... தயவு செய்யுங்க. நான் எந்த தொந்தரவும் செய்யமாட்டேன். இங்கணக்குள்ள் ஒரு ஓரமா நின்னுக்கிட்டிருக்கேன். தலைவர் வெளியே வரும் போது..." என்று கூறிக் கொண்டிருந்த போதே, அவரை மேலும் பேச விடாமல் போலீஸ்காரர் மறுபடியும் விரட்டினார். இதனைக் கண்ட காமராஜ், விரட்டப்படும் மனிதரின் முகத்தை உற்று கவனித்தார். திடீரென்று காமராஜின் முகத்தில் மலர்ச்சி. " இந்தாப்பா... அவரை ஏன் விரட்டுர... விடப்பா அவரை" என்ற காமராஜின் குரல் கேட்டு, போலீஸ்காரர் குரல் வந்த திசை நோக்கினார். அதற்குள் காமராஜரே அங்கு வந்துவிட்டார். " வேலு நல்லா இருக்கியா? வா... வா... உள்ளே போகலாம்" என்று கூறியபடியே, விரட்டப்பட்டவரின் தோளில் கையைப் போட்டு அழைத்துச் சென்றார். வேலுவின் உள்ளத்தில் திகைப்பும், மகிழ்ச்சியும் போட்டியிட்டன. எதிர்பாரத இந்த வரவேற்பு அவரை திக்கு முக்காட செய்துவிட்டது.

தன்னை காமராஜ் நினைவு வைத்திருந்தது, பார்த்தவுடன் " வேலு, வா வா" என்று அன்பு பொங்கிட அழைத்தது ஆகியவற்றால் தன்னை மற்ந்துவிட்ட அவர், காமராஜருடன் காப்பி அருந்தினார். கடந்த காலம் பற்றிய நினைவுகளை பரிமாரிக் கொண்டனர். ஆனால் காமராஜை சந்திக்க அந்த அதிகாலை நேரத்தில் எதற்காக வந்தாரோ, அந்த விஷயத்தைக் கூறவே மறந்துவிட்டார்.

காமராஜரோடு சுதந்திர போராட்ட காலத்தில் ஒரே கொட்டடியில் சிறை வாசம் அனுபவித்த உத்தம தேசத் தொண்டர் வேலு. காமரஜின் உபசரிப்பிலும், அன்பிலும் திளைத்த அவர், " அப்ப நான் போய் வர்ரேனுங்க " என்று கையெடுத்து கும்பிட்டுவிட்டு விடை பெற்றார். காமராஜரும், காலையில் எந்த கேட் அருகே போலீஸ்காரர் விரட்டி அடித்தாரோ, அந்த கேட் வரை வந்து வழியனுப்பினார்.

கேட்க வந்த விஷயத்தை வேலு மறந்துவிட்டார். கேட்காமலேயே ஊருக்குப் போய்விட்டார். வேலுவின் ஊரிலிருந்து தன்னை சந்திக்க வந்த காங்கிரஸ் நிர்வாகிகளிடம் வேலுவி குடும்ப நிலைமை, ஏழ்மையில் அவர்கள் குடும்பம் படும் கஷ்டங்கள் எல்லாம் விசாரித்து அறிந்து கொண்டார் காமராஜ். வேலு தம்மை சந்திக்க வந்த காரணத்தை தானே விசாரித்து புரிந்து கொண்டார். பிறகு சில நாட்களுக்குள்ளேயே, சின்னஞ்சிறு நிவாரணம் வேலுவின் வீடு தேடி சென்றது. மேலும் காமராஜ் முயற்சியில் ஒரு நல்ல இடத்தில் வேலுவுக்கும் வேலை கிடைத்தது. அதன் மூலம் ஒரு தொகை அவர் குடும்பத்துக்கும் கிடைக்க வழி பிறந்தது. வேலுவின் குடும்பத்தில் அதன் பிறகு துன்பம் இல்லை.

-------------------------------------------------------------------

பால்: பொருட்பால்

அதிகாரம்: பழைமை(81)

குறள்:
விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.

பொருள்:
பழைய நட்பை மறவாது பொற்றுபவர், பகைவராலும் விருப்பப்படுவார்.
-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Thursday, March 23, 2006

--------

காமராஜ் - 101 [ # 29 ]

அரசின் மொத்த வருவாய் குறைவாக இருந்தாலும், நாட்டின் நல்ல, பரந்த உள்ளம் படைத்த செல்வந்தர்களையும் கல்விப் பெருக்கத்திற்க்கு அழைத்துவர திட்டமிட்டு மாநிலம் முழுவதும் பள்ளி சீரமைப்பு மாநாடு நடந்த நேரமது.

அப்படி நடந்த பரமக்குடி கல்வி மாநாட்டில், கல்வியின் பெருமையையும், நாட்டோர் அதை பெருக்குவதில் ஆர்வங்கொள்ள வேண்டிய அவசியத்தையும் அழகுத் தமிழில் எழுதி, அச்சடித்து விநியோகம் செய்திருந்தார் துணை ஆய்வாளர் திரு. கந்தசாமி அவர்கள். மாநாட்டின் போது தன்னிடம் தந்த ஒரு அச்சுப் பிரதியை படித்த காமராஜ், சட்டமன்ற உறுப்பினரைக் கூப்பிட்டு அதைப் பத்தாயிரம் படிவங்களெடுத்து தொகுதி பூராவும் விநியோகிக்கும்படி கூறினார்.

மாநாடு முடித்து புறப்படும் போது, " எங்கே அந்த கல்வி அதிகாரித் தம்பி, அவரை கூப்பிடுங்க" என்றார். விரைந்து ஜீப் அருகே வந்த கந்தசாமியை " வாங்க தம்பி, காருலே ஏறுங்க... உங்ககிட்ட சில விவரங்கள் கேட்கணும்" என்றார்.

ஏற்கனவே முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி வண்டியின் முன்னிருக்கையில் அமர்ந்துவிட, இவர் சற்றே யோசித்தார்.

" இங்கே ...என் பக்கத்தில் உட்காருங்க" என்றழைக்க, இவர் ஒரு கணம் மலைத்துவிட்டார். நாட்டின் முதல்வருடன் அமர ஜீப் வண்டி புறப்பட்டது. போகும் போதே அவ்வட்டாரத்தில் இவரது சரகத்தில் உள்ள் பள்ளிகளைப் பற்றியும் கிராமங்கள் காட்டும் ஆர்வத்தையும் பற்றி விசாரித்துக் கொண்டே வந்தார். அப்பொது காட்டாற்றின் தரைப் பாலத்தை வண்டி தாண்டிக் கொண்டிருந்தது.

உடனே காமராஜ் வண்டியை நிறுத்த சொல்லி " ஆமா... இந்தக் காட்டாற்றில் தண்ணி போகும் போது இந்தப் பக்கத்து மாணவர்கள் எப்படிப் பள்ளிக் கூடத்துக்கு வருவாங்க?" என்று கேட்க.

" மழைக் காலத்தைல் வெள்ளம் போகும் போது மாணவர்களால் வர முடியாதையா" என்றார். அப்போது காமராஜ் "கல்வித்துறை உத்தரவுப்படி 3 மைலுக்குள்ள் பள்ளிக்கூடம் இருந்தா, பக்கத்தில் வேற பள்ளிக் கூடத்துக்கு அனுமதி கிடையாது. அப்படித்தானே. அப்போ நீங்க ஒன்னு செய்யுங்க. இந்த காட்டாற்றைக் காரணமாகக் காட்டி இந்தப் பக்கத்தில் ஒரு பள்ளிக் கூடத்துக்கு அனுமதி கேளுங்க... நானும் சொல்லி அதற்கு ஒப்புதல் தரச்சொல்லிடறேன்" என்றார்.

கல்வி அதிகாரி திரு. கந்தசாமி ஆச்சர்யத்தால் உறைந்து போனார்.

-------------------------------------------------------------------

பால்: பொருட்பால்

அதிகாரம்: குடி செயல் வகை (103)

குறள்:
சூழாமல் தானே முடிவுஎய்தும், தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு.

பொருள்:
தன் குடியையும், நாட்டையும் மேன்மை அடையச் செய்ய தேவையான செயலை விரைந்து செய்பவர்க்கு, அச்செயலை செய்து முடிக்கும் திறம் அவர் நினைக்காமலே கிடைக்கும்.
-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Wednesday, March 22, 2006

--------

காமராஜ் - 101 [ # 28 ]

சென்னை நகரின் புறநகர் பகுதியில் குட்டி நகரங்களை மேலை நாட்டுப் பாணியில் திட்டமிட்டு அமைக்க நகர அபிவிருத்திக் கழக அதிகாரிகள் திட்டமிட்டனர். ஒரு குழுவினர் மேலை நாடுகள் சென்று அவர்கள் புதிதாகத் திட்டமிட்டுக் கட்டிய நகரங்களை நேரிலே பார்த்து வடிவமைப்புப் படங்கள் தாயாரித்து வந்து, அதை தமிழகத்தில் செயல்படுத்த கூடிப்பேசினர். துறைசார்ந்த அமைச்சரையும் நேரில் சந்தித்துக் கோப்பில் ஒப்புதலும் பெற்றுவிட்டனர்.

இனி முதலமைச்சரின் பார்வைக்கு அனுப்பி அவர் ஒப்புதல் பெற்றுவிட்டால் விமானத்தில் பறக்க வேண்டியத்துதான் பாக்கி.

காமராஜரிடம் வந்த கோப்பை பரிந்துரைத்தவர்கள் அக்கால ஐ.சி.எஸ் என்ற உயரிய அரசு பணிப்பட்டத்தை பெற்றவர்கள், லண்டணிலே படித்தவர்கள்.

அதே போல மேனாட்டுப் பயணத்துக்கு தயார் நிலையிலேயிருந்த அதிகாரிகளும் காமராஜர் நிச்சயம் இதில் கையெழுத்திட்டு விடுவார் என்றே நம்பினர். கோப்பை படித்து முடித்த காமராஜ் ஒரு கணம் சிந்தித்தார்.

ஒரு நகரை திட்டமிட்டு அமைத்த நிலை நமது தமிழ் நாட்டிலோ, இந்தியாவிலோ இல்லவே இல்லையா! இதில் கூட மேல் நாட்டுக்காரந்தானா நமக்கு வழிகாட்டி? இந்த அதிகாரிகள் சென்று பார்த்து வருவதாகச் சொல்லும் இடங்கள் நம் பண்பாட்டுக்கு ஒத்து வரக் கூடியவைதானா? நாமும் நாடு பூராவும் சுத்தி வந்திருக்கிறோமே. நம் மூதாதையர்கள் இந்த நகரமைபுக்கலையில் நம்மைப் பிற நாட்டைப் பார்த்து ஏங்க வைக்கவா செய்திருப்பார்கள்? மக்கள் ஒரு துட்டு , ரெண்டு துட்டாக கொடுத்த வரிப்பணத்தில் இந்த உலக சுற்றுலா தேவைதானா? என்று சிந்தித்தபோது, அவரது அவர் மனதிலே மதுரை மாநகர் தோன்றியது.

ஊரின் மையப்பகுதியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், சுற்றிலும் தேரோடும் ரதவீதிகள், அடுத்த சுற்றில் அளவெடுத்து அமைத்தாற்போல நான்கு மாட வீதிகள், அதற்கடுத்து ஆவண வீதிகள், இடையில் இவைகளை இணைக்கும் சாலைகள். அக்காலத்திலேயே எவ்வளவு தொலைநோக்கோடு நகரை அமைத்திருக்கிறார்கள் நம்முன்னோர். இந்த அமைப்புக்கு மேல் திட்டமிடல் என்ன இருக்கிறது? என்று சிந்தித்தவுடன் கோப்பிலே எழுதினார். " இதற்காக மேலை நாட்டுப்பயணம் தெவையில்லை, எக்காலத்துக்கும் ஏற்றாற்போல அமைக்கப்பட்டிருக்கும் நம் மதுரை நகரைச் சென்று கண்டு ஆய்வு செய்து வாருங்கள்" என்று குறிப்பெழுதிக் கையெழுத்திட்டு சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அனுப்பினார்.

-------------------------------------------------------------------
பால்: பொருட்பால்

அதிகாரம்: (64) அமைச்சு

குறள்:
கருவியும், காலமும், செய்கையும், செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.

பொருள்:
ஒரு செயலை செய்யத் தேவையான பொருள்கள், செய்வதற்கு
ஏற்ற காலம், செய்யும் முறை, செய்யும் செயல் ஆகிய
அனைத்திலும் நன்மை விளையும்படி எண்ணுபவரே அமைச்சர்.
------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Tuesday, March 21, 2006

--------

காமராஜ் - 101 [ # 27 ]

காமராஜரின் குணம் அவரின் பேச்சு, செயல் எல்லாவற்றிலுமே வெளிப்படும்.

வெளியூர் பொதுக்கூட்டம் ஒன்றில் முதலமைச்சர் காமராஜ் வருவதற்காகத் திரளான மக்கள் கூட்டம் காத்துக்கொண்டிருந்தது. மலர் மாலைகளோடு தொண்டர்களும், பிரமுகர்களும் இருப்பதை பார்த்த காமராஜ், " பேச்சு முன்னே மாலை பின்னே" என்று கூறிவிட்டார்.

அதற்க்கு காமராஜ் ஒரு காரணமும் சொன்னார். " பொதுமக்கள் நம் பேச்சை கேட்பதற்காகதான் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் முதலில் அவர்கள் நன்மைக்கானன விஷயங்களைப் பேசிவிட்டு பிறகு மாலை மரியாதையை ஏற்றுக் கொள்ளலாம் என்றார் பெருந்தன்மையோடு.

அதே போன்று மேடையில் அதிக வெளிச்சம், பொதுமக்கள் இருக்கும் பகுதியில் வெளிச்சம் குறைவாகவும் இருந்தால் கடிந்து கொள்வார். " மக்களை பார்க்கத்தான் வந்தேன். அவர்களது முக உணர்ச்சிகளைப் பார்த்தால்தான் நாம் செய்வது சரியா தவறா என்று தெரியவரும். எனவே விளக்குகளை அவர்களை பார்த்துத் திருப்புங்கள்" என்பார்.

-------------------------------------------------------------------
பால்: பொருட்பால்
அதிகாரம்: குடியியல்

குறள்:
எண்பதத்தால் எய்தல் எளிதுஎன்ப யார்மாட்டும்
பண்புவுடைமை என்னும் வழக்கு

பொருள்:
எவரிடத்தும் எளிமையாக நடந்து கொள்வதல்,
பண்புடைமையை எளிதாக அடையலாம் என்று
அறிஞர் கூறுவர்.
-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

--------

காமராஜ் - 101 [ # 26 ]

சென்னை நகர சபைக்குத் தேர்தல் நடந்த சமயம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி நாயுடு தெருவில் காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டம். காமராஜ் மேடையில் அமர்ந்திருந்தார்.

" காமராஜர் திருமணம் ஆகாதவர். குடும்பம் இல்லை. குடும்பம் இல்லாதவருக்கு கஷ்ட நஷ்டம் எப்படித் தெரியும்? என்ன பொறுப்பு இருக்கும்? பொறுப்பு இல்லாதவருக்கு எப்படி ஆட்சியை சரிவர நடத்த முடியும்? என்று ஒரு தலைவர் குறை கூறியிருந்தார். அதற்க்கு பதிலளிக்க எழுந்த ஒரு பேச்சாளர் அந்த தலைவரை முன்னிலைப்படுத்தி பதில் கூற முயன்றார். பேச்சின் தரம் வசமாக மாறத் தொடங்கியது.

அதுவரைக் கேட்டுக் கொண்டிருந்த காமராஜ் தாங்க முடியாமல் கோபத்துடன் எழுந்து " நீங்கள் அதிகம் பேசி விட்டீர்கள். போதும் அமருங்கள், அடுத்தவர் பேசட்டும்" என்று கூறி வரம்பு மீறி பேச முயன்றவரை தடுத்தார்.

தனக்கு துன்பம் வரும்படி பேசியவர் கூட மனம் நோகக்கூடாது என்று நினைக்கக் கூடிய உயர்ந்த பண்பினை பெற்றவர் காமராஜ்.

-------------------------------------------------------------------
பால்: பொருட்பால்
அதிகாரம்: சான்றாண்மை (99)

குறள்:
குணநலம் சான்றோர் நலனே; பிறநலம்
எந்நலத்து உள்ள்தூஉம் அன்று

பொருள்:
சான்றோர் என்பவர்க்கு அழகு, குணங்களால் ஆகிய அழகே. பிற புற அழகெல்லாம் எந்த அழகிலும் சேரா.
-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Monday, March 20, 2006

--------

காமராஜ் - 101 [ # 25 ]

திருநெல்வேலி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவர் திரைப் பட அரங்கம் ஒன்றை கட்டியிருந்தார். ஆனால் அதை திறப்பதற்க்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி கிடைக்காமலேயே இருந்தது. அம்மாவட்டத்தில் காமராஜ் சுற்றுப்பயணம் போகிறார் என்பதை அறிந்து கொண்ட அந்த பிரமுகர், காமராஜரை அணுகி திரையரங்கை திறக்க ஒரு தேதி வாங்கி விட்டார். அதற்க்கு பயந்து கலெக்டர் அனுமதி தந்துவிடுவார் என்பது அவரின் எண்ணம்.

குறிப்பிட்ட நாள் வந்தது. காமராஜரும் அந்த திரையரங்கத்திற்க்கு வந்து சேர்ந்தார். அது வரையிலும் அனுமதி கிடைக்காததால் " எல்லா ஏற்பாடுகளும் ரெடி, ஆனா கலெக்டர் மட்டும் இன்னும் லைசென்சு கொடுக்கவில்லை" என்று காமராஜிடம் புகார் செய்தார்.

சுற்றுப்பயணத்தில் தன்னோடு இருந்த கலெக்டரிடம் விவரம் கேட்டார் காமராஜ். " இந்த திரையரங்கை கட்டியதி சில விதிமுறைகள் மீறப்பட்டிருக்கின்றன. அதனால்தான் அனுமதி கொடுக்கத் தாமதமாகிறது. இப்போது நீங்கள் விரும்பினால் உடனே அனுமதி கொடுத்து விடுகிறேன்." என்றார் கலெக்டர். உடனே காமராஜர் " அய்யய்யோ வேண்டாம் சட்டத்தை மீறி யார் நடந்தாலும் அது தப்புதான். உங்களுக்கு திருப்தி ஏற்பட்ட பிறகே அனுமதி கொடுங்கள்" என்று கலெக்டரிடம் சொல்லிவிட்டு திரையரங்கை திறக்காமலேயே சென்றுவிட்டார்.

பயிர்களை சுமந்து நிற்க்கும் போது நிலம் அழகு பெறுகிறது.
தாமரையை சுமந்து நிற்க்கும் போது குளம் அழகு பெறுகிறது.
நேர்மையை சுமந்து நிற்க்கும் போது தலைவன் அழகு பெறுகிறார்.

-------------------------------------------------------------------
பால்: அறத்துப்பால்
அதிகாரம்: அடக்கமுடைமை (13)

குறள்:
நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்;
மலையினும் மாணப் பெரிது.

பொருள்:
தன் நேர்மையான வழியை விட்டு விலகாது அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது.
-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Friday, March 17, 2006

--------

காமராஜ் - 101 [ # 24 ]

நம்பிக்கையின் நாயகமாக திகழ்ந்தவர் காமராஜ். அவர் முதலமைச்சராக இருந்த காலத்தில் சென்னை பூவிருந்தவல்லிக்கு அருகில் ஒரு பார்வையற்றோர் பள்ளி ஒன்று இயங்கி வந்தது. தனியார் அறக்கட்டளையை சார்ந்த பள்ளி, அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பல ஏக்கர் பரப்பை கொண்டிருந்த அந்தப் பள்ளியின் வளாகம், அமைச்சர் ஒருவரின் பார்வையில் பட்டுவிட்டது. அந்த பள்ளியை வேறு ஒரு இடத்துக்கு மாற்றிவிட்டால், அந்த இடத்தை வேறு ஒரு காரியத்திற்க்கு பயன்படுத்தலாம் என்று அவர் திட்டமிட்டார். இதை அறிந்ததும் காமராஜ் கொதித்துப் போய்விட்டார். மாற்றும் முயற்சியை தடுத்து நிறுத்தினார்.

அப்போது அவர் கூறினார் " மற்றவர்கள் மேல் நம்பிக்கை வைக்காமல் நம்மிடம் நம்பிக்கையோடு கொடுத்து விட்டுப் போயிருக்கிறார்கள். இந்தப் பள்ளியை நடத்தாமல் போனால் மட்டும் நம்பிக்கை துரோகமல்ல, இந்த இடத்தை மாற்றினாலே நம்பிக்கை துரோகம்தான். அரசிடம் ஒப்படைக்கப்பட்ட அறக்கட்டளையே சரியா நடக்கவில்லை என்றால் மற்றவர்கள் எந்த நம்பிக்கையோடு அறக்கட்டளைகளை நிறுவ முன்வருவார்கள். சாமர்த்தியமான பேச்சு நப்பிக்கையை காப்பாற்றாது. நாணயமாக நடந்துக்கணும், அப்போதுதான் நாலுபேர் நம்புவார்கள்."

-------------------------------------------------------------------
பால்: குடியியல்
அதிகாரம்: பண்புடைமை (100)

குறள்
நயனொடு நன்றி புரிந்த பயன்உடையார்
பண்புபா ராட்டும் உலகு

பொருள்:
நீதியையும் அறத்தையும் விரும்பிப் பிறர்க்கும் பயன்படுபவரின் பண்பினை உலகத்தவர் சிறப்பித்துப் பேசுவர்.
-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Thursday, March 16, 2006

--------

காமராஜ் - 101 [ # 23 ]

காமராஜரின் குரு சத்யமூர்த்தி. அவரின் புதல்வி லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, காமராஜ் பற்றி கூறியுள்ள நிகழ்வுகளில் ஒன்று.....

காமராஜ் தன்னை பற்றியோ, தன் வீட்டைப் பற்றியோ சிந்திப்பதே கிடையாது. இதற்கு ஒரு சம்பவத்தை என்னால் கூற முடியும்.

அவர் எங்கள் குடும்பம் மீது அளவு கடந்த அன்பும் பாசமும் வைத்திருந்தார். முதலைமைச்சராக இருந்த போது அவரும், நாங்களும் திருப்பதி கோயிலுக்கு சென்றிருந்தோம். திருப்பி வரும் போது ரேணிகுண்டாவில் புதைமணலில் காரின் டயர்கள் சிக்கிக் கொண்டது. கார் நகரவில்லை.

காரில் இருந்த காமராஜர் கீழே இறங்கி காரை தள்ளினார். முதல் அமைச்சராக இருந்த அவர் எந்தவித கவுரவமும் பார்க்காமல் காரை தள்ளியது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

எங்கள் தந்தையை குருவாக மதித்து அந்த குருவுக்கு பெருமையும் புகழும் சேர்த்த முதன்மை சிஷ்யராகவே காமராஜர் வாழ்ந்து மறைந்தார்.

-------------------------------------------------------------------
பால்: பொருட்பால்
அதிகாரம்: சான்றான்மை (99)

குறள்:
ஊழி பெயரினும் தாம்பெயரார், சார்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்

பொருள்:
சான்றான்மை எனப்படும் கடலுக்கு கரை எனப்படும் சான்றோர், காலம் மாறினாலும் தான் மாறமாட்டார்.
-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

--------

காமராஜ் - 101 [ # 22 ]

1969-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி நாகர்கோவில் இடைத்தேர்தல் நடந்தது. அப்பச்சி அப்பச்சி என குமரி மக்கள் காமரஜரை அன்போடு அழைத்தனர். ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 201 ஓட்டுகள் வித்யாசத்தில் காமராஜரை வெற்றி பெற வைத்தனர். நாகர்கோவிலின் நாயகனாகி, குமரி மக்களின் அப்பச்சி ஆனார் காமராஜர்.

தாயார் சிவகாமி அம்மையார் சுகவீனமாய் இருப்பதாக தகவல் வந்தது. விருதுநகர் வீட்டுக்கு சென்ற காமராஜ் மயங்கிய நிலையில் இருந்த அன்னையின் அருகில் அமர்ந்தார். அன்னையாரின் முகத்தில் எவ்வித பதட்டமோ, பரபரப்போ காணப்படவில்லை. கண் விழித்துப் பார்த்த அன்னையில் விழிகளில் நீர் வழிந்தது. எவ்வித சலனமுமின்றி தாயின் உணவு மற்றும் மருந்து பற்றி காமராஜ் விசாரித்தார்.

" ஒரு வாய் சாப்பிட்ட்டு விட்டுப் போ" என்று அன்னை சிவகாமி கூறினார். காமராஜரும் அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு "அப்போ நான் வரட்டுமா என கை கூப்பினார்". " மகராசனாய் போய்ட்டு வா" என்று தாய் விடை கொடுத்தார். வீட்டில் சாப்பிட்டு எவ்வளவு நாளானது? என்று உடன் இருந்தவர்கள் கேட்டார்கள். " ஒரு 25 அல்லது 30 வருடம் இருக்கும்" என்றார் காமராஜ். அனைவரும் திகைத்தனர். மரண படுக்கையில் இருந்த தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றிய காமராஜ் உடனே நாட்டைப் பற்றி பேச ஆரம்பித்தார்.

-----------------------------------------
பால்: அறத்துப்பால்

அதிகாரம்: நீத்தார் பெருமை (5)

குறள்:
ஒழுக்கத்து நீத்தார் பெருமை, விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

பொருள்:
தமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்து, ஆசைகளை அறுத்து, உயர்ந்த மேன்மக்களின் பெருமையே சிறந்தனவற்றுள் சிறந்தது என்று நூல்கள் சொல்கின்றன.
-----------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Wednesday, March 15, 2006

--------

காமராஜ் - 101 [ # 21 ]

காமராஜர் இல்லம், காலை நேரம். ஒரு சிறுவனும் சிறுமியும் காமராஜரின் வீட்டுகுள் நுழைய முயல்வதும் ஊழியர் ஒருவர் அவர்களை "உள்ளே வரக்கூடாது" என விரட்டுவதுமாக இருந்தார். குழந்தைகள் இருவரும் நம்பிக்கை இழந்து தெருவை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். அப்போது எதற்காகவோ வெளியே வந்த காமராஜ், ஊழியர் இரு குழந்தைகளை கைகளை ஓங்கி அடிப்பதுபோல் மிரட்டி விரட்டிக்கொண்டிருந்ததை பார்த்துவிட்டார். உடனே குழந்தைகளை அழைத்தார். " என்ன? ...யாரை பார்க்க வந்தீங்க?" என்று அன்புடன் விசாரித்தார். குழந்தைகள் " எங்க அண்ணாவுக்குப் பரிட்சைக்குப் பணம் கட்ட அம்மாவுக்கு வசதியில்லே. உங்களை பார்தா... ." என்று சிறுமி சொல்லி முடிக்குமுன்னே குறுக்கிட்ட காமராஜ், சிறுமியின் தொள்களில் தட்டிக்கொடுத்தபடியே " அம்மாதான் அனுப்பி விட்டாரா?" என கேட்டார்.

" இல்லை, நாங்களாகவேதான் வந்தோம். அம்மா, தினம் அப்பளம் போட்டு, வீடு வீடாகக் கொண்டுபோய் வித்துட்டு வருவாங்க. அதில வர்ற வருமானத்தை வைச்சுதான் எங்களை படிக்க வைக்கிறாங்க". காமராஜருக்கு இதற்க்கு மேலும் அந்தக் குழந்தைகளின் குடும்பம் படும்பாட்டைக் கேட்க மனம் பொறுக்கவில்லை. சில காலமாக, காமராஜரால் மடிப்படிகளில் ஏறி இறங்க முடியவில்லை. அதனால், வீட்டின் முன் பகுதியிலுள்ள ஓர் அறையிலேயே அமர்ந்து, தேடி வருபவர்களிடம் பேசுவதையே வழக்கமாக கொண்டிருந்தார். எனினும், தம்மிடம் உதவி கேட்டு வந்திருந்த இந்த இரு பெரிய மனிதர்களுக்காக மாடிப் படியேறினார். இறங்கி வரும் போது அவரது கையில் ஒரு புத்தம் புதிய கவர் இருந்தது. அந்த கவரில் சில பத்து ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. குழந்தைகளை அழைத்து, சிறுமியின் கையில் கவரைக் கொடுத்த காமராஜ் " அண்ணாவுக்கு பரிட்சைக்கு பணம் கட்ட இதை வச்சுக்கோங்க, அம்மா பேச்சை கேட்டு படிச்சு, நல்ல புள்ளைங்களா நடக்கணும்... தெரியுதா..?" என்று அன்புடன் சொன்னவர், அவர்களை முதிகில் தட்டிக் கொடுத்து அனுப்பி வைத்தார்.

மறுநாள், அதே குழந்தைகள் காமராஜரை தேடி வந்தனர். " அய்யா...! பரிட்சைக்கு பணம் கட்டியாச்சுங்க. இந்த ரசீதை அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச் சொன்னாங்க" என்றபோது, காமராஜ் மனம் நெகிழ்ந்து போனார். அந்தக் குழந்தைகள் காமராஜரின் கால்களில் விழுந்து நமஸ்காரம் சொன்னபோது, அவருக்கு மகிழ்ச்சி ஒரு பக்கம், நெகிழ்ச்சி மற்றொரு பக்கம்.

அருகிலிருந்த நவசக்தி நிருபர் அம்பியிடம் " ஏழைக் குழந்தைகள்.. பொய் சொல்ல மாட்டார்கள் என்று நினைத்தேன். பொறுப்போடு வந்து ரசீதைக் காட்டி விட்டுப் போகின்றனர்... நல்ல பிள்ளைகள்" என்றார் உள்ளம் நெகிழ்ந்த நிலையில்.

-------------------------------------------------------------------
பால்: பொருட்பால்
அதிகாரம்: (96) குடிமை

குறள்:
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகைஎன்ப வாய்மைக் குடிக்கு.

பொருள்:
முகமலர்ச்சி, ஏழைகளுக்கு உதவுதல், இனிய சொல்
பேசுதல், பிறரை ஏளனம் செய்யாமை ஆகிய நான்கும்
உயர் குடிப்பண்புகளாகும்.
-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

This page is powered by Blogger. Isn't yours?